Thursday, July 3, 2014

உடலெனும் பிரபஞ்சம் ... பிரபஞ்சம் !!!

               ம் பூதங்களின் மொத்த உருவே பிரபஞ்சம். இதுபோல் மனித உடலும் ஐம் பூதங்களால் ஆன சிறிய பிரபஞ்சம் என்கிறார்கள் சித்தர்கள். இதைத்தான் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

கடந்த இதழில் கோள்களின் செயல்பாடுகள் மனித உடலில் எந்தெந்த உறுப்புகளுடன் தொடர்புடையவை என்பதைப் பற்றி அறிந்தோம்.

இந்த பஞ்ச பூதங்கள் எவ்வாறு மனித உடலை தீர்மானிக்கின்றன, அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதை விரிவாக அறிந்துகொள்வோம்.

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள்.

இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.

                                        நிகழ்ந்த சீர்ப் பிருதிவியும் அப்பு நானும்

                                        நேரான தேயுவோடு வாயுமாகும்

                                        அகழ்ந்தவா காயத்தோ டைந்து பூதம்

                                        அரிதான பிருதிவியு மண்ணு மாகும்

                                        தகழ்ந்தவப்பு சலமாகும் நெருப்பாற் தேயு

                                        தாக்கான வாயுவது காற்றுமாகும்

                                        இகழ்ந்தவா காயமது சத்தமாகும்

                                        ஏற்றபிரு திவியும் பொன்னிறமதாமே

                                        யூகி வைத்திய சிந்தாமணி


மண்ணின் கூறுகள்

மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் இவை அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை.

பிருத்திவியில் பிருத்திவி அதாவது மண்ணில் மண் சேர்ந்ததால் உருவானதுதான் எலும்பு என்றும், மண்ணுடன் நீர் சேர்ந்து உருவானது தசை என்றும், மண்ணுடன் நெருப்பு சேர்ந்து உருவானது தோல் என்றும், மண்ணுடன் வாயு சேர்ந்து உருவானது நரம்பு என்றும், மண்ணுடன் ஆகாயம் சேர்ந்து உருவானது மயிர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

நீரின் கூறு (புனலின் கூறு)

நீரின் தன்மை கொண்டவை இரத்தம், விந்து (வெந்நீர்), சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல் என்று அழைக்கின்றனர். நீருடன் நீர் சேர்ந்து வெளியேறுவது சிறுநீர் என்றும், நீருடன் மண் (பிருத்திவி) சேர்ந்து உருவானதுதான் உமிழ்நீர் என்றும், நீருடன் நெருப்பு சேர்ந்துதான் வியர்வையானது எனவும், நீருடன் வாயு சேர்ந்துதான் இரத்தம் (குருதி, செந்நீர்) உண்டானது எனவும், நீரின் கூறுடன் ஆகாயம் சேர்வதால் உருவானதுதான் சுக்கிலம் எனப்படும் விந்து எனவும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நெருப்பின் கூறு

உணவு, தூக்கம், அச்சம், சேர்க்கை, சோம்பல் முதலியவை நெருப்பின் கூறாகும். நெருப்பை தேயு (தீ) என அழைக்கின்றனர்.

நெருப்பு கூறுடன் நெருப்பு சேரும்போது தூக்கம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் மண் சேரும் போது பசி உருவாகிறது எனவும், நெருப்புடன் நீர் சேரும்போது தாகம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் வாயு சேரும்போது அச்சம், சோம்பல் உருவாகிறது எனவும், நெருப்புடன் ஆகாயம் சேரும்போது ஆசை, சேர்க்கை உருவாகிறது எனவும் குறிப்பிடுகின்றனர்.

வளியின் (காற்று) கூறு

ஓடல், நடத்தல், நிற்றல், உட்காருதல், படுத்தல்.

வாயுவுடன் வாயு சேரும்போது ஓடுதல் நடைபெறும் என்றும், வாயுவின் கூறுடன் மண் (பிருத்திவி) சேரும்போது படுத்தல் எனவும், வாயுடன் நீர் சேரும்போது நடத்தல் நடைபெறும் என்றும், வாயுவுடன் நெருப்பு இணையும்போது உட்காருதல் நிகழும் என்றும் வாயுவுடன் ஆகாயம் சேரும்போது தாண்டுதல், குதித்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

விண்ணின் (ஆகாயம்) கூறு

இன்பம் (காமம்), உட்பகை (குரோதம்), ஈயாமை (உலோபம்), பெருவேட்கை (மோகம்), கொழுப்பு (மதம்)

விண்ணின் தன்மையுடன் ஆகாயம் சேரும்போது மோகம் உண்டாவதாகவும், ஆகாயத்துடன் மண் சேரும்போது இராகம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் நீர் சேரும்போது துவேசம் ஏற்படுவதாகவும், ஆகாயத்துடன் நெருப்பு இணையும்போது பயம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் வாயு சேரும்போது நாணம் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

மனித உடலில் ஐம்பூதங்களின் செயல்பாடுகளை சித்தர்கள் இவ்வாறு விளக்கியுள்ளனர்.

மண்ணின் தன்மையால் மயிர் வளர்கிறது. எலும்பு வலுவடைகிறது. நரம்புகள் அதிக வேகத்துடன் செயல்படுகின்றன. தசைகள் இறுக்கம் கொள்கின்றன.

இவ்வாறு பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளால் தான் மனித உடல் உருக்கொண்டுள்ளதாக சித்தர்கள் கூறுகின்றனர்.

இதே கருத்தையே ஆன்மீகம் தெரிவிக்கிறது. சைவ சமயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் கோவில்கள் அமைத்துள்ளனர்.

                                  காஞ்சிபுரம்                             மண் (பிருத்திவி)

                                  திருவாணைக்கால்                   நீர்

                                  திருவண்ணாமலை                  நெருப்பு

                                  காளஹஸ்தி                             காற்று

                                  சிதம்பரம்                                ஆகாயம்.

பஞ்ச பூதங்களையே தெய்வ வடிவமாக வணங்கி வரச் செய்துள்ளனர்.

மேலும் மனித உடலின் ஐம்பொறிகள் அதாவது ஞானேந்திரியங்கள் என அழைக்கப்படும் மெய், வாய், கண், மூக்கு, செவி பற்றியும்,

ஐந்து நுண்ணிய தன்மைகளாக சுவை, ஒலி, ஓசை, நாற்றம், ஊது பற்றியும் வரும் இதழ்களில் விரிவாகக் காண்போம்.

  உரிமம் : நக்கீரன்

பாட்டியின் பத்து மாதப் சூத்திரம் ???

ஒரு பொண்ணு எப்ப ஒரு கொழந்தைக்கி தாயாகுறாளோ.. அப்பத்தான் அவ முழுமை அடையிறா.. அதுனால இதுதான் உன் வாழ்க்கையின் முக்கியமான தருணம். அதுனால கவனமா இருக்கனும்...”                                               
                                        


“தாய் உண்ணும் உணவும், எண்ணும் எண்ணமும்தான் சேய்க்கு சேருங்கிறது அனுபவப் பாடம். அதனால நல்ல எண்ணங்கள வளத்துக்க... முடிஞ்ச வரை மனச் சஞ்சலத்துக்கு எடங்கொடுக்காத... சாப்பாட்டுல பழங்களையும் கீரை களையும் காய்களையும் நெரையா சேத்துக்க... 5 மாசம் வரைக்கும் கடுமையான வேலை எதையும் செய்யாத... அதுக்குப் பொறவு சின்னச்சின்ன வீட்டு வேலைகளைச் செய்யலாம். வேலையே செய்யாம படுத்திருக்குறதும் தப்பு.... ஓய்வொழிச்சல் இல்லாம வேலை செய்யிறதும் தப்பு... 5 மாசம் வரைக்கும் ஒம் வீட்டுக்காரன கொஞ்சம் ஒதுங்கியே இருக்கச் சொல்லு... நீண்ட தூரப் பயணம் போகவே போகாத... கூட்ட நெரிசலானஎடங்களுக்கும் போகாத. அமைதியும் சந்தோஷமும் ரொம்ப முக்கியம். ஒனக்கு எது சந்தோஷமான விஷயமோ அதைச் செஞ்சுக்கிட்டுரு... நல்ல புத்தகங்களைப் படிக்கலாம்... இனிமையான பாட்டுகளக் கேக்கலாம்...”

“இந்த மாதிரி நேரத்துல அம்மா வீட்டுலதான் தன் விருப்பத்துக்கு இருக்க முடியும். அதுனாலதான் புள்ளத்தாச்சி புள்ளையளெ, அம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறது பழக்கம்.... கொழந்தங்கிறது நம்ம வாழ்க்கையோட அடுத்தக்கட்ட அடையாளம். அது ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி... அத ஆரோக்கியமானதா பெத்தெடுக்க வேண்டியது நம்மோட கடமை... இப்போதைக்கு வேற எதையும் நீ மனசுல போட்டுக்குறப்புடாது... கொழந்தை ஒன்னுதான் ஒம்மனசுல நிக்கணும்...”

“அப்புறம்... கொழந்த வளர வளர.. வயிறு பெரிசாகும். அப்போ மூச்சுத் தெணறுற மாதிரி இருக்கும்.. அப்பப்ப கால்ல நீர் கோத்து வீங்கிக்கும்... நெஞ்சு படபடக்குறமாதிரி இருக்கும்... அடிக்கடி மலச்சிக்கல் வரும்.. இப்ப மருந்து சொல்றேன் கேட்டுக்க....”

“அதிமதுரம், நற்சீரகம், ஜடமாஞ்சில், பட்டை நீக்கிய வில்வ வேர், வட்டச் சாரணை வேர், காய்ந்த முடக்கற்றான், சித்தரத்தை, நிழல்ல காயவச்ச குருந்தட்டி இது எல்லாத்துலயும் வகைக்கு 5 கிராம் எடுத்து ரெண்டு கொவள தண்ணி ஊத்தி நல்லா கொதிக்க வையி.. அது வத்தி ஒரு கொவளையா வந்ததும் ஒரு கொவள எளனி தண்ணிய ஊத்தி மறுபடியும் கொஞ்சம் கொதிக்க ஆரம்பிச்சதும் எறக்கி மூடி ஆறவையி...”

“நல்லா ஆறினதும் வடிகட்டி 5 வது மாசத்திலருந்து 7வது மாசம் வரைக்கும் ஒருநா விட்டு ஒரு நா காலைல 11 மணி லேர்ந்து 12 மணிக்குள்ள இல்லன்னா... சாயந்தரம் 4 மணிலேர்ந்து 6 மணிக்குள்ள சாப்பிடு.. 7வது மாசத்திலேர்ந்து கொழந்த பொறக்குற வரைக்கும் தெனமும் ஒரு வேளை குடி... மருந்து கசக்குமோன்னு பயந்துடாதடியம்மா.. இனிப்பாத்தான் இருக்கும்...“

“நாஞ் சொன்ன மாதிரி மருந்து சாப்பிட்டு வந்தின்னா.. கொழந்தைக்கும் எந்தவிதமான நோயும் வராது... பிரசவமும் சுகப்பிரசவமா இருக்கும்...”

  உரிமம் : நக்கீரன்

அம்மான் பச்சரிசி... !!!

                                             அம்மான் பச்சரிசி

ரிய மூலிகைகளின் அற்புத மருத்துவக் குணங்களை ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். காலுக்கடியில் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்ட மூலிகைகளை அறியாமலே தேவையற்ற களையாக நினைத்து அழித்துவிட்டனர். இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் நோய்களின் கூடாரமாக தங்கள் உடம்பை ஆக்கிக்கொண்டு, தினமும் மாத்திரை விழுங்கினால்தான் வாழ்வு என்று வாழ்கின்றனர்.

இந்த நிலைக்குக் காரணம் நம் முன்னோர்களின் அறிவுப் பொக்கிஷங்களை அலட்சியப்படுத்தியதன் விளைவேயாகும்..

முக்காலத்தையும் அறிந்தவர்களான சித்தர்களும் ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம்தான் சித்த மருத்துவம். இந்த மருத்துவம் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது. இத்-த-கைய மருத்துவத்தன்மை வாய்ந்த மூலிகைகளைப் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அம்மான் பச்சரிசி என்ற மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு... வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.

இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

Tamil - Amman Pacharisi

English - Snake weed

Sanskrit - Dugdhika

Telugu - Reddine narolu

Malayalam - Nela paalai

Botanical name - Euphorbia hirta

                                       காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்

                                       சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் - பேர்ந்தென்றாய்

                                       ஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே

                                       கூருமம்மா ணொத்தகண்ணாய் கூறு

                                                                                               - அகத்தியர் குணபாடம்

அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்-றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படும்.

மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும்.

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க

அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

தாய்ப்பால் சுரக்க

சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இதனால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உண்டான சத்துக்கள் யாவும் கிடைக்காமல் போய்விடும். தாய்ப்பால் சரியாக சுரக்காததால் சிலர் குழந்தைகளுக்கு புட்டிப்பால் அதாவது பசும்பாலோ கடையில் வாங்கிய பாலோ கொடுப்பார்கள். இதில் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது.

இவர்கள் தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.

மலச்சிக்கலைப் போக்க

இதன் இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.

வீக்கம் கொப்புளங்கள் ஆற

உடலில் கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது பற்று போட்டால் கொப்புளங்கள் வீக்கங்கள் குணமாகும்.

பெண்களுக்கு

வெள்ளைப் படுதலால் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு அளாவார்கள். அதிகமா-க கோபப்படுவார்கள். எப்போதும் டென்சனாகவே காணப்படுவார்கள். இந்த வெள்ளை படுதல் நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும் .

மரு நீங்க

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.

தாது பலப்பட

அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்

  உரிமம் : நக்கீரன்